Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest

இலக்குகள் வேண்டுமா வேண்டாமா?

நாம் வளரும் போது உலகம் நம்மிடம் எப்போதும் , “உனது இலக்குகள் மீது எப்போதும் கவனமாக இரு”, என்று கூறித்தான் வளர்க்கிறது. நானும் அப்படித்தான் லட்சியம், குறிக்கோள் என்றுதான் வளர்ந்தேன். வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அவற்றை அடைய முடியாமல் போனபோது, பலவிதமான காரணங்களால் தலைகுப்புற விழுந்தபோது தான் இந்த லட்சியங்களும் குறிக்கோளும் வாழ்க்கையில் மிக முக்கியமா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அந்த நேரத்தில் நான் சற்றே திரும்பி பார்த்தபோது நான் இழந்தவைகள் எத்தனை என்பது புரிந்தது. சக நண்பர்களுடன் களிபேச்சை நான் இழந்திருந்தேன், குடும்பத்தினருடன் அன்பான பொழுதுகளை நான் இழந்திருந்தேன். வாழ்க்கையின் இன்ன பிற பொன்னான தருணங்களை நான் இழந்திருந்தேன். எல்லாவற்றை விட மிக முக்கியமாக, இந்த இலக்கே குறி என்று வாழ்க்கை அளித்து நான் என்றாவது கண்டுகொள்வேன் என்று காத்திருந்த இந்த “லட்சியம்” என்ற ஒன்றை தாண்டி இருந்த இன்ன பிற பொன்னான வாய்ப்புகளை, விஷயங்களை, வெகுமதிகளை நான் இழந்திருந்தேன்.

“அர்ச்சுனா, நீ அம்பெய்யும் போது என்ன கண்டாய்” என்று துரோணர் கேட்கையில், “எனக்கு அந்த புறாவின் கண்மணிகள் மட்டுமே தெரிந்தது”, என்று அர்ச்சுனன் கூறியதை இன்றும் நமது இலக்குகள் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாய் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் குருக்‌ஷேத்திரத்திலே அவன் அந்த அம்பெய்யும் வேலையை பிடித்து செய்யவில்லை. “அதர்மத்திற்கு எதிரான யுத்தத்தில் உனது வில்லிற்கு வேலையுண்டு விஜயா,” என்ற இறை கட்டளை காரணமாகவே அதனை செய்தான்.  இதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 

வாழ்க்கை என்பது போர்க்களமும் இல்லை. நாம் வில்லாளிகளும் இல்லை. உண்மையில் நமது வாழ்க்கை எங்கே தொடங்கியது என்றும் நமக்கு தெரியாது, எங்கே முடியும் என்றும் நமக்கு தெரியாது. அப்படி இருக்கையில் இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு அதன் போக்கில் போக வேண்டுமா, அதன் காரணமாக பலவற்றை இழந்துதான் ஆக வேண்டுமா என்ற கேள்வி எனது மனதில் என்னைக் குடைந்தெடுத்தது. 

ஒரு பக்கம் நான் நிர்ணயித்து ஓடிய அந்த ஒரு முக்கிய இலக்குதான் எரிபொருளாக எனக்குள்ளே அணையாமல் இருந்து என்னை ஓட வைத்துக் கொண்டிருந்தது. அதனை மறுக்க முடியாது. ஆனால் “இந்த இலக்குதான் வாழ்க்கையா, அப்படியென்றால் இலக்குகள் இல்லாமல் வாழ்கின்றவர்கள் எல்லாம் முட்டாள்களா”, என்ற கேள்வி எழுகின்றதல்லவா

ஒரு ஜென் குருவிடம் வழிபோக்கன் கேட்டானாம், “நீங்கள் வாழ்க்கையில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்”, என்று. அதற்கு அந்த ஜென் குரு, “நான் காலையில் எழுந்திருக்கிறேன். மூன்று வேளை உண்கிறேன். உறங்குகிறேன். பின்பு மீண்டும் காலையில் எழுந்திருக்கிறேன்,” என்று சொன்னாராம்.

சாதாரணமாக மேம்போக்காக பார்க்கும் போது இது ஏதோ பைத்தியக்காரத்தனமாக தோன்றும். சோம்பேறிகளுக்கு இந்த வாசகம் அல்வா சாப்பிட்ட மாதிரி இருக்கும். ஆனால் மெய்விளக்க தத்துவங்கள் சொல்ல முற்படும் நுண்ணிய ஆழ்ந்த கருத்துக்களை நாம் கவனிக்கத்தவறிவிடுகிறோம். இன்னோரு ஜென் குரு மேலுள்ளதையே, “நான் உண்ணும் போது உண்கிறேன். உறங்கும் போது உறங்குகிறேன்”, என்று சொல்கிறார். அப்படியென்றால் என்ன அர்த்தம். எத்தனை பேரால் உண்ணும் போது உணவில் மட்டுமே கவனம் செலுத்தி உண்ண முடிகிறது உறங்கும் போது எந்த தொந்தரவும் இல்லாமல், மனக்கிலேசங்கள் இல்லாமல் நிம்மதியாக உறங்க முடிகிறது இதை அந்த ஜென் குருவால் செய்ய முடிகிறது. 

என் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு இந்த விஷயங்களை ஆராய்ந்தேன். சரியாக சொன்னால் இந்த ஜென் போல ஒருவிதமான துறவற வாழ்க்கை மாதிரியான ஒரு வாழ்க்கையை கடைபிடித்து பார்த்தேன். ஆனால் அது உண்மையான ஜென்னுக்கு ஈடாகவில்லை என்பது பிறகுதான் புரிந்தது. காரணம் நான் இருந்த கார்ப்பரேட் உலகம். உலகத்தில் பணத்திற்கான அழுத்தம் அதிகமாக ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு விஷயத்திற்கும் பணம் என்பது காலாகாலமாக நிர்ணயிக்கப்பட்டு வந்துள்ளது. அதற்காகத்தான் உழைக்கிறோம் என்பதுவும் மனித மனதில் அழுந்த பதிவெற்றப்பட்டுள்ளது. அதுவே வாழ்க்கை என்பதுவும் எப்படியோ மண்டையில் உருவேற்றப்பட்டுள்ளது. இன்று பணமே வேண்டாம் என்ற வாழ்க்கையில் ஒதுங்கி போய் வாழ்ந்து விட முடிவதில்லை. அப்படியே வாழவேண்டுமென்றால் அதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள புத்தவிகாரங்கள் எங்கோ மலைமுகடுகளில் இருக்கின்றன. அங்கு சென்றாலே முடியும். இது ஒரு விதத்தில் உண்மை என்றாலும், அங்கும் வாழ்க்கை வாழ பல விஷயங்களை செய்ய வேண்டியிருக்கிறது. வேண்டிய காய் கனிகளை தாமே பயிரிட்டு விளைவிப்பது. பின்னர் அவற்றை ஆகாரத்திற்கு உட்கொள்ளுவது. அருகில் உள்ள காடுகளில் இருக்கும் மரங்கள் சிலவன காய்கனிகள் தரலாம். ஆனால் அவற்றை பறிப்பதுவும் நம் வேலையாயிற்றே. உண்பதும், உறங்குவதும் போக மிச்ச நேரங்களில் என்ன செய்வது பௌத்த சூத்திரங்களை மணிக்கணக்கில் உட்கார்ந்து வாசிக்கலாம். ஓதலாம். அதையும் தாண்டி

ஒரு மடாலயத்திலேயே இப்படி என்றால், தினசரி வாழ்க்கையில் அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கும் உலகவாசிகளுக்கு “உண்பதும், உறங்குவதும்” எப்படி பொருந்தும் நான் குழம்பியது இந்த இடத்தில் தான். கண்டிப்பாக நகரத்தில் வாழ வேண்டும் என்றால், எதையாவது ஒன்றை செய்து வாழத்தான் வேண்டும். அதில் பணம் ஈட்ட வேண்டும். அந்த பொருளை ஈடாகக் கொடுத்து அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேண்டும். இங்கு பணம் அல்லது பொருள் என்பது ஏதோ கொடிய ஒன்று அல்ல. பரிவர்த்தனைக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சாதனம். அதனை பயன்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

இந்த புரிதலின் போது என்னை மற்றுமொரு ஜென் கதை கடந்து சென்றது. ஒரு முதுபெரும் ஜென் துறவி ஒரு ஊரில் இருந்தாராம். அவர் ஊர் மக்களுக்கு ஏதாவது ஒரு வேலை செய்தால் அதற்கு பணம் பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தாராம். இதனை அந்த ஊரில் உள்ள பெரிய செல்வந்தரின் மனைவி, “துறவிக்கு எதற்கு பணமும் பொருளும்” என்ற கேள்வியுடன் அவருக்கு பாடம் புகட்ட எண்ணி அவரிடம் செல்கின்றாள். தன் பாவாடைய காட்டி இதில் படங்கள் வரைந்து தர வேண்டும் என்று கேட்கிறாள். அதை பார்த்து அவர் வெட்கித் தலை குனிவார் என்று எண்ணுகிறாள். மாறாக துறவி அதற்கு ஒத்துக் கொள்கிறார். ஆனால் அவர் அதற்கு இரண்டு மடங்கு விலை வேண்டும் என்று சொல்கிறார். வேலையை செய்து முடித்து அந்த பணத்தை பெறுகிறார். விடாத அந்த பெண்மணி மேலும் நான்கைந்து பேரை கூட்டிக் கொண்டு வந்து அவர்களின் பாவாடைகளுக்கும் அதே போல படங்கள் வரைந்து கொடுக்க வேண்டும் என்று கேட்கிறாள். அவர் அதற்கு மூன்று மடங்கு பணம் கொடுத்தால் செய்து தருகிறேன் என்கிறார். அந்த பெண்மணியின் நோக்கமே இவர் உண்மையான துறவியே இல்லை என்று அனைவரின் முன் காண்பிக்கத்தான். ஆனாலும் அதை பொருட்படுத்தாது அவர் பணத்தை மும்மடங்கு கேட்டது அவளை வியப்பிலும் அதே நேரத்தில் வெறுப்பிலும் ஆழ்த்தியது. நீயெல்லாம் ஒரு துறவியா என்று கேட்டுவிட்டு போய்விடுகிறாள். பின்னாளில் அந்த முதிய துறவியோ தான் செய்து வந்த வேலைகளையும் நிப்பாட்டிவிட்டு அதற்காக பணம் வாங்குவதையும் நிறுத்திவிட்டார் என்பதை கேள்விப்படுகிறாள் அந்த பெண்மணி. ஏன் என்று வினவியதில், அவர் தான் கட்டிய ஒரு கல்விக்கூடத்திற்காகத் தான் அந்த பணத்தை சேர்த்ததாக அறிகிறாள். வெட்கி தலைகுனிகிறாள்.

இந்த கதையில் தன் உன்னத நோக்கம் ஈடேற அந்த முதிய ஜென் குரு பல வேலைகள் செய்து பணம் சேகரிப்பதற்காக உள்ளது. இங்கு அதுதான் அவருடைய யதார்த்தம். கல்வி சாலை கட்டுவது என்பது அவருடைய இலக்கு அல்ல. ஆனால் அந்த வேலை அவருக்கு பிடித்திருந்தது. அந்த கல்விசாலையால் பலரும் பயன் பெறுவார்கள் என்பது அவருக்கு மகிழ்ச்சியளித்தது. ஆனால் அவரை சுற்றியிருந்த யாவரும் அவருக்காக இலவசமாக அந்த கட்டிடத்தை கட்டிக் கொடுக்க தயாராக இல்லை. ஆனால் அந்த குருவும் விடுவதாக இல்லை. இதற்காக பணியெடுத்து அதற்கான கூலியை சேகரித்து அந்த கல்விகூடத்தைக் கட்டுகிறார். இடையில் எந்தவிதமான ஏளனத்தையும் அவர் பொருட்படுத்தவில்லை. 

இந்த மாதிரி சூழ்நிலைகளில் பணம் ஒரு முகாந்திரம் மட்டுமே. பணமே இங்கு பிரதானம் இல்லை. பணம் சேகரிப்பதே என் இலக்கு, சொகுசு வீடு கட்டுவதே என் இலக்கு, சொகுசுக் கப்பலில் உலகை சுற்றுவதே என் இலக்கு என்று இலக்கு நிர்ணயித்து ஓடலாம். ஆனால் அவற்றில் அதற்கான “நிபந்தனைகள்குட்பட்டது” லேபிள் இருக்கும். வாழ்க்கையில் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கலாம். என்றோ அடையப்போகும் ஒன்றிற்காக யதார்த்தமான இன்றை முழுவதுமாக இழக்க வேண்டியிருக்கலாம். அந்த நேரங்களிலும் இந்த உலகத்தில் உள்ளவர்கள் தயாராக ஒரு பொன்மொழியை வைத்துள்ளார்கள். 

“எதையாவது ஒன்றை இழந்தால்தான் எதையாவது ஒன்றை பெற முடியும்”

வாழ்வில் சங்கடங்கள் ஏற்படுத்தும் என்றால் இலக்குகள் எதற்குத் தேவை?

இதற்கு சரியாக விளக்கம் சொல்ல வேண்டுமென்றால் எங்கள் அலுவலகத்தை தான் நான் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அங்கு பணிபுரியும் எனது ஊழியர்களிடம் ஒரு நேர இலக்கு கொடுக்காமல் விட்டு ஆராய்ச்சி செய்திருக்கிறேன். அவர்களிடம் இருந்து ஆச்சர்யப்படும் விதமாக பலன்கள் கிடைத்தன. மிக முக்கியமாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட முன்னதாக 21 பேரில் 3 பேர்கள் மட்டும் முடித்திருந்தனர். மற்றவர்களிடம் ஏன் “டெட்லைன்(Deadline)” கிடையாது என்ற கேள்வியுடன் செயலும் இருந்தது. வேலைகள் செய்து கொண்டுதான் இருந்தனர் ஆனால் முடிக்க முடியவில்லை. இப்படி ஒரு 15 பேர் இருந்தனர். மீதம் உள்ள கூட்டத்தார் தங்கள் பொழுதை அலுவலகத்தில் வெறுமனே கழித்துக் கொண்டிருந்தனர்.  மாதம் ஆனால் கண்டிப்பாக சம்பளம் கிடைத்துவிடும் என்று. 

இந்த மூன்று பேரிடம் பேசிய போது, “எங்களுக்கு பிடித்த வேலையை செய்வதற்கு எதற்கு சார் எல்லைகளும் நிபந்தனைகளும்,” என்றார்கள். 

அவர்களைப் பிறகு பார்ப்போம். ஆனால் ஒரு அலுவலக சூழ்நிலையில் ஒவ்வொரு மணித்துளியும் அதற்கான பணம் செலவாகிக் கொண்டிருக்கிறது என்ற நிலையில் பாக்கியுள்ளவர்களிடமிருந்தும் வேலையை முடித்து பெறவில்லையென்றால் அது அந்த தொழிலின் பொருளாதார நஷ்டத்தில் கொண்டு விட்டுவிடும். ஆக அவர்களுக்கு அந்த மூன்று பேரின் தெளிவு வரும் வரை “இலக்குகள்” தேவைப்படுகிறது. வெறுமனே பொழுதைக் கழிப்பவர்களுக்கு இன்னும் கடுமையாய். 

உலகில் நஷ்டப்பட்டால் மீண்டும் கிட்டாதது காலம் மட்டுமே. அதனை பயனுள்ள முறையில் பயன்படுத்த ஒன்று அதற்கேற்ற பக்குவம் தேவைப்படுகிறது. இல்லையென்றால் “ (பொருளாதார/வாழ்வியல்)இலக்குகள்” போன்ற உந்துசக்தி தேவைப்படுகிறது. சொந்த வாழ்க்கையில் இதே போல ஒவ்வொருவரும் இலக்கு நிர்ணயித்து ஓடுவது ஏதோ ஒன்றை நோக்கி ஓடுகிறோம் என்ற எண்ணத்தையாவது (சீரியஸாக செயல்படுத்துபவர்களுக்கு) ஏற்படுத்துகிறது.

இலக்குகள் இல்லாமல் ஓடவே முடியாதா? 

ஏன் முடியாது ஏற்கனவே சொன்னமாதிரி இலக்குகளை விட பயணத்தின் முக்கியத்துவம் தெரிந்தவர்கள் தமது பயணத்தில் லயித்து பிடித்ததை செய்து ஓடுகிறார்கள். பிடித்த விஷயங்களை செய்யும் போது அவர்களுக்கு காலம் போவதும் தெரிவதில்லை. அந்த காலம் பயனில்லாததாகவும் கழிவதில்லை. ஆனால் இந்த “பிடித்த விஷயம்” தான் செக் பாயிண்டே. “எனக்கு சூதாடுவது பிடிக்கும், நான் அதனை செய்யலாமா”, என்று இதைப் பற்றிய உரையாடலில் ஒரு நண்பர் கேள்வி எழுப்பினார். சூதாடுவது என்பது போதை. அதில் எங்கு எதையாவது இழந்து விடுவோமோ என்ற பயம் இருக்கும். எந்த லஹரி வஸ்துவும் அதேதான். குடிகாரர்களிடம் குடிக்கும் போது இருக்கும் அந்த வேகம், விவேகம்(?!) அதன் பின் இருப்பதில்லை. ஆனால் இயல்பாக நம்மிடம் ஒரு பிடித்தம் இருக்கும். அது நம் இயல்பும் கூட. ஒரு ஓவியன் தன் ஓவியங்களில் மெய்மறந்து போக செய்வது அதுவே. ஒரு எழுத்தாளனை ஆன் எழுத்துக்களின் ஆழங்களுக்கு செல்ல வைப்பது அதுவே. ஒரு மருத்துவனை மனிதநேயம் பார்க்க வைப்பது அதுவே. இந்த இயல்பான பிடித்தத்தை கண்டுபிடித்தவர்களை வேறு எதுவும் ஆட்கொள்வதில்லை. அந்த இயல்பே அவர்களை எதையும் சிறப்பாக அர்ப்பணிப்புடன் செய்து முடித்துவிட வைத்துவிடுகிறது. அர்ப்பணிப்புடன் செய்யப்பட்ட எதுவும் அதற்கான வெகுமதிகளுடன் மட்டுமே இப்பிரபஞ்சத்தில் வருகிறது. எவரும் எதிர்பார்க்காத அளவு பொருளும் அதில் அடக்கம்.

இந்த ஓட்டத்தில் இங்குதான் போகப்போகிறோம், இப்படித்தான், இந்த திசையில் தான் போகப் போகிறோம் என்பது கிடையாது. ஆனால் நாம் ஓடும் பாதையெல்லாம் பூக்கள் தானாக பூக்கும். என்ன செய்யவேண்டும் என்று நினைத்தோமோ அதுவெல்லாம் நடக்கும். நாம் விரும்பியன தானே நடக்கும். 

லாவொட்சுவின் இந்த வாக்கியங்கள் அதைத்தான் நினைவுறுத்துகின்றன.

இலக்குகள் இல்லாமல் செய்பனவற்றில் கவனம் செலுத்துதல் சாத்தியமா?

சாத்தியமா என்று கேட்டு நேரத்தை கடத்துவதை விட செயலில் இறங்கிப் பார்ப்பதுதான் சால சிறந்தது.

சில நேரங்களில் படிக்க பணமில்லை என்று என் அம்மாவிடம் முறையிடும் சில குழந்தைகளின் பெற்றோர்களை பார்த்திருக்கிறேன். அவர்களிடம் வாழ்க்கை தத்துவங்களை போதித்து கொண்டிருப்பதில் பிரயோஜனமில்லை. இப்படிப்பட்ட நிலைக்கு நாம்தான் காரணம் என்று நொந்து கொண்டு அதனை திருத்த வசதியுள்ளவர்களிடம் போதனை செய்வதுவும் பிரயோஜனமில்லை. சாத்தான் காதில் வேதம் ஓதுவது தகுமோ. அப்போதுதான் “மாற்றமாய் நீ இரு” ஒலித்தது. இவர்களுக்கு வேண்டியதை செய்வோமே. பிரபஞ்ச பேராற்றல் எனக்கு அளித்திருக்கும் திறமைகள் கொண்டு அதற்கு முயல்வோமே என்று. அதில் மனம் குதூகலித்தது. இதை இலக்கென்று வைக்க முடியுமா ஒரு வேளை இதுதான் இயல்பென்றால். இதில் சுணக்கங்கள் இருக்க வாய்ப்பில்லை. நான் செய்யத் தொடங்கினேன். மற்றவர்களுக்கு பயனுள்ள விதத்தில் வாழ்க்கையை மாற்றி அமைக்கத் தொடங்கினேன். இங்கு எனக்கு இலக்குகள் இல்லாமல் இல்லை. கார்ப்பரேட் சமுதாயத்திற்கே உள்ள இலக்குகள் இருக்கின்றன. அலுவலகத்தில் பொருளாதார கொள்கையை நான் நிச்சயம் கடைபிடிக்கிறேன். எனது பிளானர் இருக்கின்றது. ஆனால் செய்பனவற்றில் நான் அதிக கவனம் செலுத்தும் போது அவைக்கான பலன்களை அது பார்த்துக் கொள்கிறது. நான் செய்துக் கொண்டு மட்டுமே இருக்கிறேன். பலனை அதனிடத்தில் விட்டுவிட்டேன். 

இலக்குகளிலேயே, அவற்றை நிர்ணயித்து திட்டமிடுதலில் மட்டுமே நான் என் முழு கவனத்தை திசை திருப்பியதில்லை. மாறாக எனது ஞாபகமறதிக்கு ஒரு துணையாக நான் அந்த திட்ட அட்டவணையை பார்க்கிறேன். இந்த இலக்குகளுடன் நான் என்னை மனதளவில் பிணைத்துக் கொள்ளவில்லை. மாறாக அதன் பலன்களை பிரபஞ்ச பேராற்றலிடம் ஒப்படைத்து விட்டு முடிந்தளவு செய்யும் செயல்களில் முழுமையாக என்னை நான் அர்ப்பணித்துக் கொள்கிறேன். செல்லும் இலக்கு இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று பிடிவாதமாய் இருப்பதைவிட அந்த பிடியை தளர்த்தி செயலது செம்மையானால் செல்லுமிடம் பரமே என்று உறுதியாக செல்கிறேன். அதனால் முன்பு ஏற்பட்ட அந்த ஏமாற்றங்கள் இப்போது இல்லை. பயணம் செம்மையாக போய்க்கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை ஒவ்வொரு கணத்தையும் விழிப்பாகவே வைத்திருக்கிறது. பயணத்தின் இனிமையை என்னால் ரசிக்க முடிகிறது. வாழ்க்கையில் கடந்த, கடக்கும் யாவருக்கும் நேரம் ஒதுக்க முடிகிறது. குடும்பம், நண்பர்கள் எல்லொருடனும் இனிமையாக அன்பு பாராட்ட முடிகிறது. 

“இலக்கிலா” இந்த பயணம் என்று சொல்வதை விட “செம்மையான செயல்களுடைய” இந்த பயணம் என்றே சொல்ல வேண்டும். அது நம்மை பல உயரங்களுக்கு இட்டு செல்கிறது என்பதே உண்மை. ஒரு வேளை அந்த முதிய ஜென் துறவி போல, என்றாவது ஒரு நாள், நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்பினேனோ அதை செய்து விட்டேன் என்று என் பொருளாதார மற்றும் வாழ்வியல் இலக்குகளை நான் நிறுத்திவிடக் கூடும். அது அந்த சமயத்தில் தான் தெரியும். 

“பயணிகளுக்கு சேருமிடம் பற்றிய கவலையில்லை.

காரணம் அவருக்கு சேருமிடம் ஒன்றென்றில்லை

ஒன்றை அடைந்தபின் மற்றொன்றிற்காய் தொடங்கும்

மற்றொரு பயணம்

பயணிக்கு பயணம் மட்டுமே என்றென்றும் இனிமை”

லாவோத்சு

நல்ல விஷயங்களை பகிர்ந்து உதவுங்கள்!

Vinoth Rajesh

Vinoth Rajesh

Founder of Alpha at Omega Foundation for Human Excellence and its media wing Agam, Arputham. Highly Committed to the Service of Humanity. Also wearing multiple hats as: An Author, Independent Film Maker and Social activist.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Top Posts

புத்தக புதையல்

உங்கள் தர்மத்தில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? – “போதியின் நிழல்” உணர்த்தும் வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கையில் தாம் எடுத்த காரியத்தை செவ்வனே முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் ஆயிரத்தில் ஒருவராகவே இருப்பர். அதிலும் அந்த காரியம் பெரியதாக …

Read More →

நிறைவான வாழ்க்கையை உறுதி செய்யும் டாக்டர் வேய்ன் டயரின் 7 புத்தகங்கள்

வாழ்க்கையின் எந்தவொரு பிரச்சினைக்கும் ஒரு ஆன்மீக தீர்வு உண்டு என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? ஆன்மீகம் என்றாலே பயந்து பின்வாங்குபவர்களுக்கு …

Read More →

வாழ்க்கையின் ஒரு அரிய உண்மையை விளக்கும் ‘மூங்கிலின் கதை’

“என்னப்பா வாழ்க்கை எப்படி போகிறது” என்ற கேள்விக்கு எப்போதுமே நம் பல பேரிடம் இருக்கும் பதில், “அது எங்கேப்பா.. அப்படியே …

Read More →

எனது கதை

வாழ்க்கையில் லட்சியத்துடன் இரு, வெற்றியை நோக்கி ஓடு என்ற அறிவுரைகளை கேட்டு வளர்பவர்கள் தான் நாம். சமூகம் சொல்லும் விதிகளை, …

Read More →

உன் கையில்தான் மகனே…

ஒரு சிறுவன் தன் தாயிடம் சென்று “அம்மா யாரம்மா அந்த முதியவர், அந்த மலை மேல் உட்கார்ந்து கொண்டு தவம் …

Read More →

பொன்விதி தெரியுமா உங்களுக்கு?

உலகில் எல்லாவற்றிலும் எல்லாவர்க்கும் நன்மை பயக்க எல்லா மதங்களும் பின்வரும் ஒரு விஷயத்தை போதிக்கின்றன. இதனை நாம் “பொன் விதி” …

Read More →

மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள் புத்தகத்தை வாங்கி பயன்பெறுங்கள்!!

Scroll to Top