Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest

உங்கள் வாழ்க்கையை எப்போதுமே நேர்மறை எண்ணங்கள் ஆட்கொண்டிருக்க நீங்கள் செய்ய வேண்டிய இருபது விஷயங்கள்

1. உங்கள் ஒவ்வொரு நாளையும் புன்னகையுடன் தொடங்குங்கள்

நான் இதனை பலப்போதும் பலவிடங்களிலும் சொல்லி வருகிறேன். உங்கள் நாளை நீங்கள் எப்படி தொடங்குகிறீர்கள் என்பதில் தான் அந்த முழு நாளும் இருக்கிறது. கண்விழிக்கும் போதே அன்றைக்கு நாள் எப்படி இருக்குமோ என்றும், இருக்கும் கடன் சுமைகள் பற்றி நினைத்துக் கொண்டும், அன்றைக்கு யார் என்ன பிரச்சினை பண்ண போகிறார்களோ என்று பயந்து கொண்டும் அந்த நாளை தொடங்கும் பட்சத்தில் நிச்சயமாக உங்கள் விருப்பத்தை பிரபஞ்சம் தவறாமல் நிறைவேற்றி வைக்கும். நீங்கள் எதிர்பார்த்த அத்தனை பிரச்சினைகளும் வரும். அதுவே மிகவும் சந்தோஷமாக, உங்கள் முழு ஆற்றலோடு அந்த நாளை வரவேற்றுத் தொடங்கி பாருங்கள், எல்லாமே உங்களை மகிழ்விக்கும் விதத்திலேயே கண்டிப்பாக நடக்கும். “இந்த அற்புத விடியலை, என் வாழ்வில் பிரபஞ்சம் அளித்த மீண்டும் ஒரு நாளை நன்றி கூறி நான் வரவேற்கிறேன்” என்று பெருமகிழ்ச்சியுடன் ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள். 

2. பிரபஞ்ச பேராற்றலிடம் வழிநடத்துதல் கேளுங்கள்

படைக்கப்பட்ட நம்மை விட படைத்த இறை பேராற்றல் சர்வ வல்லமை வாய்ந்தது. எனவே ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் சிறிது நேரம் பிரார்த்தனையும் தியானமும் இருப்பது உங்களுக்கு பல நன்மைகளுக்கு காரணமாகி உங்களை நேர்மறையாகவே வைக்கும். நமக்கு உண்மையிலேயே என்ன வேண்டும் என்பதுவும், நமக்கு உண்மையிலேயே என்னவெல்லாம் நன்மை செய்யும் என்றும் அதற்கு தெரியும். எப்போதும் குறைப்பாட்டு மனநிலையில் இல்லாமல், உங்களுக்காக அபரிமிதமாக எல்லாமும் கொட்டிக் கிடக்கும் எல்லா வளத்துக்கும் நன்றி சொல்லுங்கள். அத்தனையையும் கொடுத்து நம்மனைவரையும் தாயன்போடு வழிநடத்தும் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி சொல்லி ஒவ்வொரு தினத்தையும் தொடங்குங்கள்.   

3. முன்னதாகவெ திட்டமிடுங்கள்

நம்மை கவலையில் ஆழ்த்தும் தினசரி விஷயங்கள் இரண்டு. ஒன்று அன்றைய தினம் என்ன வேலை செய்வது என்பது பற்றி ஒரு தெளிவில்லாமல் இருப்பது. அடுத்தது  செய்யும் சில வேலைகள் சரிவர நடக்காமல் சரியான பலன் தராமல் போவது. இரண்டையும் சரி செய்ய ஒவ்வொரு நாளையும் நீங்கள் முன்னதாகவே திட்டமிட்டு வைத்து விடுங்கள்.  இந்த திட்ட்டமிடுதல் ஒரு வகையில் அன்றைய தினம் எப்படி இருக்கப் போகிறது என்று உங்களுக்கு ஒரு தெளிவு தரும். இரண்டாவது அது எப்போது, எப்படி நடக்கப் போகிறது, அதில் பங்கு பெறுவோர் யார் யார், என்னென்ன பொருட்கள் தேவைப்படுகிறது போன்ற அத்தனை விஷயங்கள் குறித்தும் உங்களுக்கு தெரிவித்து விடும். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் அனைத்திற்கும் தயாராகவே இருப்பீர்கள். உங்களின் இன்றைய திட்டங்களும் இலக்குகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை மனதளவில் உட்கொள்ளுங்கள். விளைவுகள் பற்றி கவலையில்லாமல் நீங்கள் உங்கள் தினத்தின் நேர்மறையாக முன்னேற இது உதவி செய்யும். 

4. மிக முக்கியமான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்

நம் தினசரி வாழ்க்கையில் நமது கவனத்தை திசை திருப்ப ஆயிரம் விஷயங்கள் நடந்த வண்ணமே இருக்கும். ஆங்கிலத்தில் Being Busy and Being Productive are two different things என்று சொல்வார்கள். நாம் எல்லோரும் எப்போதும் எதையோ ஒன்று செய்து கொண்டிருக்கிறோம் என்பதற்காக நாம் சரியானதைத் தான் செய்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. அதிலும் பல வேலைகளை ஒன்றாக இழுத்து போட்டு செய்து கொண்டிருப்பது வண்டி சக்கரம் சேற்றில் சிக்கி திணறிக் கொண்டிருக்கும் போது ஆக்சிலேட்டரை போட்டு முறுக்குவது போல இருக்கும். வண்டி மட்டும் நகர்ந்திருக்காது. நாம் வாழ்க்கையில் மிக முக்கிய இலக்கை/நோக்கத்தை வைத்து நகர்ந்து கொண்டிருப்போமேயானால், அதனை நோக்கி அடுத்த படி எடுத்து வைக்கிறோமா என்று தினசரி உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. எனவே எதையோ ஒன்று செய்யாமல் அன்றைய தினத்திற்கு வேண்டியதை, சரியாக திட்டமிட்டதை மட்டுமே செய்கிறீர்களா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

5. செயல்களையும் விளைவுகளையும் மனக்கண்ணில் வைத்து கணக்கிடுங்கள்

நாம் செய்யும் செயல்களை பற்றி திட்டமிடும் போது அது எங்கே எப்படி நடக்கிறது என்பதையும், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதையும் மனக்கண்ணில் வைத்து ஒரு திரைக்காட்சியை ஓட்டிப் பார்ப்பது நல்லது. ஆழ்மனதில் இருக்கும் ஒரு சூட்சுமத்திறன் இந்த நேரத்தில் ஏதேனும் இதில் இடர்கள் இருக்குமாறு தெரிந்தால் உங்களுக்கு உள்ளுணர்வாய் எச்சரிக்கை செய்யும். திட்டமிட்ட செயல்கள் செய்யும் போது வரும் இடர்களுக்கு நீங்கள் தயாராக இருக்கவும் மாற்றுத் தீர்வுகளைக் காணவும் உங்களுக்கு இது துணையாக இருக்கும். அதே நேரத்தில் எல்லாம் சரியாகவே நடக்கிறது என்று ரிலாக்ஸாக இருங்கள். இந்த உணர்வே உங்களை எதையும் பதட்டப்படாமல் செய்யவும், உங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டங்களூடே நகர்ந்து செல்லவும் உதவிக் கொண்டே இருக்கும்.

6. விளைவுகளில் இருந்து விலகி இருங்கள்

இது ஒரு முரண்பட்ட வாக்கியம் போல இருக்கும். ஆனால் அதனை ஆழமாக பார்த்தால் ஏன் சொல்கிறேன் என்பது உங்களுக்கு புரியும். நீங்கள் ஒரு விஷயத்தை திட்டமிட்டு செய்ய ஆரம்பித்து விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கான விளைவும் உங்கள் மனக்கண்ணில் இருக்கிறது. ஆனால் அந்த விளைவே உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று நீங்கள் உறுதியாக இருக்கும் போது பல நேரங்களிலும் உங்களுக்கு ஒரு விதமான பதட்டத்தை உண்டு பண்ணி விடுகிறது. கோழி முட்டை போட்டு விட்டது என்று சந்தோஷபப்ட்டுக் கொண்டே தினமும் குஞ்சு பொறித்து விட்டதா என்று அது அடைகாக்கும் போது எடுத்து பார்த்துக் கொண்டே இருந்தால் என்னவாகும்? அதே நிலைமை தான் உங்கள் திட்டங்களுக்கும் இலக்குகளுக்கும். எதை செய்வதாக இருந்தாலும் நிதானமாக, ஆனந்த களிப்புடன் செய்யும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது இப்பிரபஞ்சம். உங்களுக்கு பிடித்த வேலையை நீங்கள் செய்யும் போது நீங்கள் நேரம் போவதே தெரியாமல், கஷ்டப்படுகிறோம் என்று கூட ஒரு உணர்வு இல்லாமல் செய்வதை நீங்கள் கவனித்து இருக்கலாம். நீங்கள் விளைவில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் செயலில் கவனம் முழுமையாக இருக்கவே இருக்காது. நம் பெரியவர்கள் சொல்லிச் சென்ற பழமொழி ஒன்று உண்டு – “பதறாத காரியம் சிதறாது”. விளைவில் நீங்கள் கவனம் செலுத்தும் போது ஒவ்வொரு அசைவிலும் உங்கள் பதற்றம் வெளிப்படும். ஒரு வேளை நீங்கள் நினைத்த நேரத்தில் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் போகலாம். அதற்கு காரணம் இருக்கிறது என்பதை முழுமையாய் உணருங்கள். விளைவுகளோடு நீங்கள் ஒட்டாத போது அது ஒரு பெரிய ஏமாற்றத்தை தரப்போவது இல்லை. “எல்லாம் நலமே” என்று நீங்கள் மகிழ்ச்சியோடு அடுத்த கட்டத்திற்கு நகரலாம்.

7. தினமும் புதிய விஷயங்கள் எதையாவது முயற்சி செய்யுங்கள்

உங்களுக்கு நேர்மறை ஆற்றல் பெருகுவதற்கு இது மிகவும் உதவி புரியும். புதியதாக ஏதாவது ஒரு விஷயம் செய்ய துணியுங்கள். உதாரணத்திற்கு ஒரு புதிய மொழியில் சில புதிய விஷயங்களை பேசுவதற்கு நான் இன்று கற்றுக் கொள்ள போகிறேன் என்று நீங்கள் நினைத்து செய்யத் தொடங்குகிறீர்கள் என்றால் அந்த டாஸ்க் முடியும் நேரத்தில் எதையோ ஒன்றை சாதித்த அந்த குதூகல உணர்வு உங்கள் நேர்மறை ஆற்றலை இன்னமும் அதிகப்படுத்தவே செய்யும். 

8. சமன்பட்ட மனநிலையில் எப்போதும் இருங்கள்

இப்பிரபஞ்சத்தில் உள்ள இருமை நிலைகளைக் குறித்தும் அவை இரண்டும் எப்படி ஒன்றாகின்றன என்ற தத்துவத்தையும் முழுமையாக உணருங்கள். நன்மையையும் தீமையையும், இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிக்கும் மனநிலை உங்களுக்கு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். எது நடந்தாலும் “இதுவும் கடந்து போகும்” என்ற மனநிலை கொள்ளுங்கள். இப்படி இருக்கும் போது மிகுதியான சந்தோஷமும், கவலையும் நம்மை ஆட்கொண்டு மேலும் இடையூறு செய்யாது. வாழ்க்கைத் தராசில் தட்டுக்களை சமமாக வைக்கும் போது நிறைவான மனநிலையை நிச்சயம் பெற முடியும்.

9. உங்கள் உடல், மனத்தின் ஆரோக்கியத்தில் முழுக் கவனம் செலுத்துங்கள்

நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை இது. உங்களை முழுமையாக கவனித்துக் கொள்ள நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள். உங்கள் உடல் மன ஆரோக்கியத்தை குறித்து முழுமையாக உங்களால் மட்டுமே அறிய முடியும், உணர முடியும். நீங்கள் எப்போதெல்லாம் கவலைக் கொள்கிறீர்கள், எப்போதெல்லாம் ஆனந்தத்தில் மிதக்கிறீர்கள் என்பதை துல்லியமாக உங்களால் மட்டுமே சொல்ல முடியும். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு சில சமயம் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல தோன்றினாலும், உண்மை அதுவாக இருக்க வாய்ப்பில்லை. எனவே உங்கள் வாழ்க்கை இப்போது இருப்பதற்கு முழு பொறுப்பாளி நீங்களே ஆவீர்கள். இதுவரை போனது போகட்டும் இனியாவது கவனித்து கொள்ளுங்கள். மனம் கவலையுறுவதாக எண்ணும் போது அதனை மாற்ற உங்களுக்குவந்த சில வழிகளை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். அதனை கடைபிடிக்கத் தொடங்குங்கள். உதாரணமாக உங்களுக்கு நல்ல இசை பிடிக்குமென்றால், அந்த இசையை கேட்கும் போதெல்லாம் உங்களுக்கு மனம் இளகிவிடும், லேசாகிவிடும், மீண்டும் மகிழ்ச்சியடைய துவங்கி விடுவீர்கள் என்றால் அதை செய்யுங்கள். மனம் ஆரோக்கியமாக இருக்கும் போது அது உடலை கவனித்துக் கொள்ளும்.

10. உங்களை முழுமையாக நேசியுங்கள்

நன்றாக கவனியுங்கள். வேறு யாரோ ஒருவரை அல்ல. உங்களை நீங்களே முழுமையாக நேசிக்க சொல்கிறேன். பிறர் என்னை நேசிக்க மாட்டேன் என்கிறார்கள், என்மீது யாருக்கும் அன்பே இல்லை என்று சொல்பவர்களா நீங்கள். அப்படியென்றால் உங்களை நீங்களே சரியாக நேசிக்கவில்லை என்றர்த்தம். உங்களை நீங்கள் முழுமையாக நேசிக்கும் போது, உங்களை பற்றிய உயர்வான எண்ணங்கள் உங்களுக்கு தோன்ற ஆரம்பிக்கும். உங்களுக்கு இருக்கும் நல்ல குணங்கள் தானே உங்களுக்கு புரிய வரும். அதைக் கொண்டு மட்டுமே உங்களால் மற்றவரோடு உறவாட முடியும். உங்கள் மீது நீங்கள் செலுத்தும் அன்பே மற்றவர்களிடம் பிரதிபலிக்கும். இதுவே நேர்மறைக்கு ஒரு காரணம் ஆகிவிடும். 

11. எப்போதும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே இருங்கள்

இந்த உலகில் கவலைப்பட சில விஷயங்கள் இருக்கிறது என்றால் நினைத்து மகிழ்ச்சியடைய பல ஆயிரம் விஷயங்கள் இருக்கும். ஆனால் நாம் நினைப்பதுதான் இல்லை. நம் சிறுவயது முதல் எத்தனையோ நல்ல விஷயங்கள் நடந்திருக்கும், மகிழ்ச்சியான தருணங்கள் இருக்கும், இப்போது நினைத்தால் கூட நம்மை புன்னகைக்க வைக்கும் எத்தனையோ விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். நினைத்து பாருங்கள். ஒன்றுமே இல்லையென்றாலும் அவற்றைக் குறித்து எண்ணிப் பார்த்து மகிழுங்கள். தினமும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஆனந்த்தமாக புன்முறுவலுடன் அவற்றை எதிர்கொள்ளுங்கள். எப்போதும் சிரித்த முகத்தவராகவே இருங்கள். உதடுகளும் உள்ளமும் இணைந்து சிரிக்கட்டும். நம் வாழ்வில் எதிர்மறைகள் எந்த விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தவே கூடாது.

12. நீங்கள் வாழ்வில் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து இருக்கும் அத்தனை விஷயத்தையும் எழுத்துவடிவில் பட்டியிலிட்டு வையுங்கள்

இது நமக்கு பலப்போதும் ஒரு உந்து சக்தியாகவே செயல்படும். உங்களுக்கு ஒரு புதிய உற்சாகத்தை கொடுக்கும். சில விஷயங்களை வாழ்க்கையில் செய்ய முடியாமல் போகலாம். ஆனால் அதுவே ஒரு குறுக்கீடு ஆகக்கூடாது. அதனால் பெரியது முதல் சிறியது வரை அனைத்தையும் பட்டியலிடுங்கள். ஒரு சில விஷயங்கள் நடக்காமல் போனாலும் மனம் நடக்கும் விஷயங்களைக் கண்டு பழகிப் போய் மகிழ்ச்சியை தக்க வைக்க பழகிக் கொண்டு விடும்.

13. நேர்மறையான ஒத்தக்  கருத்துடைய மனிதர்களுடன் எப்போதும் தொடர்பிலிருங்கள்

“உன்னால் முடியாது” என்று சொல்பவர்களிடம் இருந்து விலகி “துணிந்து பார், முடியும்” என்று உங்களை ஊக்கப்படுத்தும் மனிதர்களுடன் என்றும் தொடர்பிலிருங்கள். அப்படி ஒரு வட்டத்திலேயே இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அவர்களோடு தினசரி உரையாடுங்கள்.  நீங்கள் வீழுகின்ற போதெல்லாம் உங்களை தாங்கும் ஒரு கூட்டமாக அது இருக்கும். 

14. எதுவொன்றையும் தீர விசாரிக்க கேள்வி கேளுங்கள்

இதனால் நேர்மறை எப்படி பெருகும் என்று நீங்கள் கேட்கலாம். பகுத்தறிவின் ஒரு பகுதி போல தோன்றினாலும், இதில் உள்ள ஒரு உண்மையை நாம் ஆராய்வோம். ஒரு விஷயத்தை மென்மேலும் தெரிந்து கொள்ள, அதன் புரிதலில் நமக்குள்ள எல்லைகளை தகர்க்கவும் நமது கேள்விகளும் அதற்கான பதில்களும் நமக்கு உதவக்கூடும். அதிக அறிவு நமக்கு எப்போதும் ஆற்றலையே தரும்.

15. எல்லாவற்றையும் திறந்த மனத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்

எல்லோருக்கும் எல்லாமும் தெரியாது. இதுதான் உண்மை. இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தில் இருங்கள். நாம் செல்லும் எல்லா இடத்திலும், சந்திக்கும் எல்லா மனிதர்களிடத்தும், ஒவ்வொரு நிகழ்விலும் நாம் புதிதாக கற்றுக் கொள்ள ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருக்கும். அவற்றை எல்லாம் திறந்த மனத்துடன் இருந்து கற்றுக் கொள்ள தயாராக இருங்கள். தெரியாததை தெரியாது என்று சொல்லும் மனப்பக்குவத்தை பெறுங்கள். புதியதாக வரும் யோசனைகள் மற்றும் தகவல்களை வேண்டாம் என்று சொல்லி மூடித் தடுத்துவிடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை. மனம் விசாலமானது. இன்னும் கேட்டால் எல்லையற்றது. எனது மனத்தில் இடமே இல்லை என்று ஒரு போதும் உங்களால் சொல்ல முடியாது. 

16. மற்றவர்கள் மீது எப்போதும் நம்பிக்கை வையுங்கள்

சில நேரங்களில் வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் உங்களை இந்த கருத்துக்கு எதிராக சிந்திக்க வைக்கலாம். நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. உங்கள் அனுபவங்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கப்போவது இல்லை. ஒரு தவறு காரணமாக அனைத்துமே தவறாக இருக்கும் என்று நீங்கள் எண்ணுவது சரியல்ல. ஒருவர் ஏமாற்றிவிட்டார் என்பதற்காக இந்த உலகமே அப்படித்தான் என்று நினைப்பது தவறு. உலகம் மங்கலாக தெரிவது உங்கள் பார்வையில் உள்ள கோளாறாக இருக்குமே ஒழிய உலகத்தில் இருக்காது. அதே போல உங்கள் நம்பிக்கைகளால் நீங்கள் வெளிப்படுத்தும் ஆற்றலானது எப்படியோ அப்படித்தான் நீங்கள் ஈர்க்கும் பொருட்களும் மனிதர்களும் இருப்பார்கள். எனவே நல்ல ஆற்றல் மிக்க உணர்வலைகளை செலுத்திக் கொண்டே மற்றவர்கள் அனைவரின் மீதும் நம்பிக்கையை வெளிப்படுத்துங்கள். கவலை வேண்டாம் அந்த நம்பிக்கையானது இறைபேராற்றல் மீது உங்களுக்கு இருப்பது. அது உங்களுக்கு எப்போதும் நன்மையே செய்வதாக இருக்கும்.

17. மன்னியுங்கள் மறந்து விடுங்கள்

நம்மை பிடித்து வைத்திருக்கும் மிகப்பெரிய பேயானது மற்றவர்கள் நமக்கு இழைத்த கொடுமைகளை நாம் நம்முள் பிடித்து வைத்திருப்பதே. அதே போல நாம் செய்த தவறுகளினால் விளைந்த கேடுகளும் கூட. இரண்டையும் நாம் கண்டிப்பாக மன்னிக்க வேண்டும், மறக்க வேண்டும். காரணம் இவை ஆயிரம் டன் எடையுள்ள கற்கள் போன்றவையாகும். நம்மை எழுந்திருக்கவே விடாது. தவறுகளும், தோல்விகளும் வாழ்வில் ஒரு பகுதி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றை மன்னிக்கும் போதும் மறக்கும் போதும் நாம் லேசாக உணர்வதை நம்மால் கவனிக்க முடியும். அந்த பாரம் இறங்கினால் விண்ணில் பறக்கக் கூட முடியும்.

18. அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்

வாழ்க்கை நமக்கு எப்போதும் எதையாவது ஒன்றை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. கல்விச்சாலைகள் கற்றுத் தருவதை விட அனுபவங்கள் கற்றுத் தரும் விஷயங்கள் மனதில் நிலையாக தங்கி விடும். நேர்மறைகள் தரும் அனுபவங்களை விட எதிர்மறைகள் கற்றுத்தரும் விஷயங்கள், படிப்பினைகளுக்கு வலிமை அதிகம். அவற்றை வாழ்வின் அடுத்த கட்டங்களில் சிறப்பாக அடியெடுத்து வைக்க பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒவ்வொரு நாளும் நேர்மறைகள் தந்த நல்லனுபவங்களுக்கு நன்றியும், எதிர்ம்றை அனுபவங்கள் தந்த படிப்பினைக்கும் நன்றி சொல்லியும் முன்னேறி செல்லுங்கள். 

19. உங்கள் ஆசீர்வாதங்களை எண்ணி கணக்கிடுங்கள்

இந்த பிரபஞ்ச பேராற்றலானது உங்களை தாயன்போடு எப்போதும் வழிநடத்திக் கொண்டிருக்கிறது. நீங்கள் உங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதங்களுக்கு என்றென்றும் நன்றியுடையவராக இருக்க வேண்டும். அதை நீங்கள் எண்ணிப் பார்க்கும் போதே உங்கள் உள்ளம் பூரிப்படைய வேண்டும். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நிகழும் நன்மைகளுக்கும் நிறைவேறும் உங்கள் விருப்பங்களுக்கும் நன்றி சொல்லி பழகிப் பாருங்கள். வாழ்க்கையில் மென்மேலும் ஆசீர்வாதங்களை நீங்கள் பெறுவீர்கள்.

20. உங்கள் கவலைகளை உறுதியுடன் துரத்தி அடியுங்கள்

ஒவ்வொரு நாளும் முடியும் தருணத்தில், அந்த நாளில் நீங்கள் விரும்பத்தகாத ஒன்று நடந்திருந்தால் அவற்றை அன்றே முடித்து அதன் அனுபவத்தின் தாக்கத்திலிருந்து உங்கள் மனதை விடுவித்து விடுங்கள். அந்த நிக்ழ்வுகளின் நினைவுகள் உங்களிடமிருந்து விடபெறுவதாக பாவியுங்கள். அவற்றை விடுவியுங்கள். உங்களை அது எவ்விதத்திலும் பாதிக்காது. மாறாக நன்மையே செய்யும். நன்றியுணர்வுடன் அந்த நாளில் நடந்த அத்தனை விஷயத்திற்கும் நன்றி சொல்லுங்கள். உங்களைப் படைத்த இறைபேராற்றலை முழுமையாக நம்புங்கள். நீங்கள் கேட்பதைக் காட்டிலும் உங்கள் நம்பிக்கைக்குதான் வலிமை அதிகம்.     

நல்ல விஷயங்களை பகிர்ந்து உதவுங்கள்!

Editorial Team

Editorial Team

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Top Posts

புத்தக புதையல்

உங்கள் தர்மத்தில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? – “போதியின் நிழல்” உணர்த்தும் வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கையில் தாம் எடுத்த காரியத்தை செவ்வனே முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் ஆயிரத்தில் ஒருவராகவே இருப்பர். அதிலும் அந்த காரியம் பெரியதாக …

Read More →

நிறைவான வாழ்க்கையை உறுதி செய்யும் டாக்டர் வேய்ன் டயரின் 7 புத்தகங்கள்

வாழ்க்கையின் எந்தவொரு பிரச்சினைக்கும் ஒரு ஆன்மீக தீர்வு உண்டு என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? ஆன்மீகம் என்றாலே பயந்து பின்வாங்குபவர்களுக்கு …

Read More →

வாழ்க்கையின் ஒரு அரிய உண்மையை விளக்கும் ‘மூங்கிலின் கதை’

“என்னப்பா வாழ்க்கை எப்படி போகிறது” என்ற கேள்விக்கு எப்போதுமே நம் பல பேரிடம் இருக்கும் பதில், “அது எங்கேப்பா.. அப்படியே …

Read More →

எனது கதை

வாழ்க்கையில் லட்சியத்துடன் இரு, வெற்றியை நோக்கி ஓடு என்ற அறிவுரைகளை கேட்டு வளர்பவர்கள் தான் நாம். சமூகம் சொல்லும் விதிகளை, …

Read More →

உன் கையில்தான் மகனே…

ஒரு சிறுவன் தன் தாயிடம் சென்று “அம்மா யாரம்மா அந்த முதியவர், அந்த மலை மேல் உட்கார்ந்து கொண்டு தவம் …

Read More →

பொன்விதி தெரியுமா உங்களுக்கு?

உலகில் எல்லாவற்றிலும் எல்லாவர்க்கும் நன்மை பயக்க எல்லா மதங்களும் பின்வரும் ஒரு விஷயத்தை போதிக்கின்றன. இதனை நாம் “பொன் விதி” …

Read More →

மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள் புத்தகத்தை வாங்கி பயன்பெறுங்கள்!!

Scroll to Top