Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest

கவனமும் தியானமும்

இத்தனை நாட்களில் நான் பார்த்த, பேசிய மக்களில் பலரும் தாங்கள் செய்யும்  தியானத்தை பற்றி மிகவும் பெருமையாக பேசிக் கொள்வதைக் காண முடிந்தது. பலரும் தாம் பயின்ற தியான முறைதான் சிறந்தது என்று அடித்து வாதிடுவார்கள். நான் பலப்போதும் வெறுமனே சிரித்து மௌனம் காப்பதுண்டு. சொல்வதைக் கேட்டுக் கொள்வார்கள் என்பவர்களிடம், “அன்றாட வாழ்க்கையின் போக்கை ஒவ்வொரு க்‌ஷணமும் முழு விழிப்புணர்வோடு கடத்துவதுதான் உண்மையான தியானம்” என்று சொல்லுவேன். எல்லோரும் ஆமோதித்தாலும் வெகு சிலருக்கு மட்டுமே அதன் உண்மை தாத்பர்யம் புரிகிறது. உங்களுக்கு ஏன் என்று புரிகிறதா?

பொதுவாக தியானம் என்றால் சம்மணக்கால் போட்டு பத்மாசனத்தில் அமர்ந்து சொல்லிக் கொடுக்கப்பட்ட முறைப்படி எதையாவது ஒன்றை கவனித்தல் என்பது நம் அனேகர் மனதிலும் ஆணி அடித்தாற்போல பதிந்து விட்டது. இந்த முறைகளில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் மனிதருக்குள் எழும் ஒரு வித எண்ணப் போக்கானது தாம் செய்யும் முறையே சிறந்தது என்று ஒவ்வொருவரையும் பேச வைக்கிறது. 

“இது எனக்கு நல்ல ரிசல்ட் குடுக்குது. நீங்களும் செஞ்சு பாருங்க”

என்று பிரிவினை உண்டாக்கி இழுக்க வைக்கிறது. பிரிவினை என்று நான் சொல்வது இந்த பயிற்சியாளர்கள் மத்தியில் எழும் “நீங்க அந்த கூட்டமா, நான் இந்த கூட்டம்” என்று சொல்லும் மனநிலை. இதற்கும் மதவாதத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை. “நீங்க அந்த சாமி கும்பிடுபவரா, நான் இந்த சாமி” என்பது போலதான் அது.

நாம் எப்போதும் இந்த பிரிவினை வாதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பழகிவிட்டோம். உண்மை கருப்பொருளைக் காண்பதில்லை. அந்த செயல்முறைக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுகிறோம். தியானம் என்பது எப்படி செய்கிறோம் என்பதல்ல. அதன் உண்மையான தாத்பர்யத்தை உணர்ந்து கொள்வது. தியானமாகவே வாழ்க்கையை கழிப்பது. நமது கவனம் எதில் முழுமையான அர்ப்பணிப்போடு செல்கிறதோ அதுவே முழுமையான தியானமாக மாறிவிடுகிறது. வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் அதன் போக்கில், அதில் நடக்கும் நேர்மறை எதிர்மறை அனைத்தையும் சரிவிகிதமாக உட்கொண்டு முழு விழிப்புணர்வோடு கவனிக்கிறோம் என்றால் அதுவே தியானம். அது உட்கார்ந்த நிலையில் இருக்கலாம், படுத்த நிலையில் இருக்கலாம், உண்ணும் போது இருக்கலாம், உறங்கும் போது இருக்கலாம். 

இந்த காரணத்துக்காகதான் ஜென்னில் க்‌ஷணம் என்பதற்கும், “பார்” என்பதற்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு க்‌ஷணமும் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஐம்புலன்களையும் விழிப்போடு அந்த க்‌ஷணத்தில் நடப்பவையில் கவனம் செலுத்துகிறோம் என்றால் என்ன நடக்கிறது என்று பாருங்கள். அனைத்து சக்ராக்களும் ஏற்கனவே ஊக்குவிக்கப் பட்டிருக்கும். மூச்சு சீராக இருக்கும். எல்லாம் சரியாக இயங்கிக் கொண்டிருக்கும். இதைத்தான் நாம் பத்து பதினைந்து நிமிட பயிற்சிகளில் செய்து கொண்டிருக்கிறோம். 

அந்த பத்து பதினைந்து நிமிடங்களும் எண்ணப் போக்குகளை நம்மால் நியந்திரிக்க முடிவதில்லை. கண்ணை மூடி தியானம் செய்வதாக பாவித்தாலும் கவனம் முழுதும் பிரச்சினைகளிலேயே இருக்கிறது. அதற்கு கண்ணைத் திறந்து பிரச்சினைகள் இருப்பதை காணத்துவங்கினாலே அதற்கான தீர்வுகள் தெளிவாகத் தொடங்கும். 

ஈர்ப்பு விதி பயிற்சிகளில் ஒன்று சொல்லித் தருவதுண்டு. நீங்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தினால் உங்களுக்கு மேலும் பிரச்சினைகள்தான் வாழ்வில் ஏற்படும் என்று. நாம் நம் வாழ்வில் நித்தம் நித்தம் எதில் கவனம் செலுத்துகிறோம் என்பதில் விழிப்போடு இருந்தால், அந்த விழிப்புணர்வே உங்களுக்கு அடுத்த படிக்கு இட்டு செல்லும். உங்கள் கவனத்தின் பாதை வேண்டாததில் இருந்து வேண்டியவைக்கு மாறத் துவங்கும். அது கண்ணை மூடி உட்கார்ந்தால் தான் நடக்கும் என்று நினைக்க வேண்டாம். 

இப்படித்தான் நான்கு ஜென் துறவிகள் தமது மடாலயத்தில் தியானம் செய்ய உட்கார்ந்தனர். குறைந்தபட்சம் ஒரு வாரமாவது எந்த விதமான தொந்தரவும் இல்லாமல் முழுமையாக தியானத்தில் ஈடுபட வேண்டும் என்பது தான் திட்டம். ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிவிட்டு பத்மாசனத்தில் அமர்ந்து தியானம் செய்ய தொடங்கினார்கள். சிறிது நேரத்திலேயே ஏற்றிய மெழுகுவர்த்தி காற்றில் அணைந்து விட்டது.

“அச்சச்சோ அணைஞ்சுடுச்சே” என்றார் முதல் துறவி.

“அதை நீ சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை” என்றார் இரண்டாவது துறவி.

“அவன் தான் மௌனத்தை கலைத்து பேசினான் என்றால் உனக்கெங்கே போய் விட்டது புத்தி?”, என்று நாடினார் மூன்றாமவர்.

அதையெல்லாம் மௌனமாக பார்த்து கொண்டிருந்த நான்காமவர். 

“நீங்கள் எல்லாம் எதற்குத்தான் தியானம் செய்ய வந்தீர்களோ தெரியவில்லை. பேசாமல் தியானம் செய்வதை விட்டு விட்டு மூன்று பேரும் பேசி விட்டீர்கள். இறுதியில் நான் தான் பேசவே இல்லை”, என்று பெருமைப் பட்டு சொல்லிக் கொண்டார்.

உண்மையில் கண்களை மூடி தியானத்தில் கரைந்து உள்ளே வெளிச்சத்தை காணும் எண்ணமுள்ளவன், வெளியில் வெளிச்சம் அணைந்து போனதை கண்டுகொள்ளவே மாட்டான். அவர்கள் கவனம் ஆக மொத்தத்தில் தியானத்தில் இல்லை. இதற்கு கண்கள் மூடி உட்கார வேண்டும் என்றும் அவசியம் இல்லை. நித்தம் நித்தம் ஒவ்வொரு கணமும் அந்த கணத்திலேயே கரைந்து போய், அது மட்டுமே நிதர்சனம் என்பதை முழுமையாக உணர்ந்து வாழ தொடங்குபவனின் வாழ்வு அடுத்தடுத்த க்‌ஷணத்தில் தன்மாற்றம் பெறத் துவங்குகிறது. தான் கவனம் செலுத்த வேண்டியது அணைந்து போன மெழுகுவர்த்தியில் அல்ல என்பது தானாகவே புரியத் தொடங்குகிறது. 

இதற்கு பயிற்சிகள் கற்கத் தேவையில்லை. வாழ்வே குருவாக இருந்து வழிநடத்த தொடங்கிவிடுகிறது. இனி பிரிவினைகள் இல்லை, தியானம் குறித்த பயமும் சந்தேகங்களும் இல்லை. முற்றும் துறந்து மலைகளில் அடைக்கலம் அடைந்த தவசிரேஷ்டர்கள் பெற்ற அனைத்தும் இங்கே, இப்போது, இக்கணம் பெறவும் முடிகிறது.

நல்ல விஷயங்களை பகிர்ந்து உதவுங்கள்!

Vinoth Rajesh

Vinoth Rajesh

Founder of Alpha at Omega Foundation for Human Excellence and its media wing Agam, Arputham. Highly Committed to the Service of Humanity. Also wearing multiple hats as: An Author, Independent Film Maker and Social activist.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Top Posts

புத்தக புதையல்

உங்கள் தர்மத்தில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? – “போதியின் நிழல்” உணர்த்தும் வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கையில் தாம் எடுத்த காரியத்தை செவ்வனே முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் ஆயிரத்தில் ஒருவராகவே இருப்பர். அதிலும் அந்த காரியம் பெரியதாக …

Read More →

நிறைவான வாழ்க்கையை உறுதி செய்யும் டாக்டர் வேய்ன் டயரின் 7 புத்தகங்கள்

வாழ்க்கையின் எந்தவொரு பிரச்சினைக்கும் ஒரு ஆன்மீக தீர்வு உண்டு என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? ஆன்மீகம் என்றாலே பயந்து பின்வாங்குபவர்களுக்கு …

Read More →

வாழ்க்கையின் ஒரு அரிய உண்மையை விளக்கும் ‘மூங்கிலின் கதை’

“என்னப்பா வாழ்க்கை எப்படி போகிறது” என்ற கேள்விக்கு எப்போதுமே நம் பல பேரிடம் இருக்கும் பதில், “அது எங்கேப்பா.. அப்படியே …

Read More →

எனது கதை

வாழ்க்கையில் லட்சியத்துடன் இரு, வெற்றியை நோக்கி ஓடு என்ற அறிவுரைகளை கேட்டு வளர்பவர்கள் தான் நாம். சமூகம் சொல்லும் விதிகளை, …

Read More →

உன் கையில்தான் மகனே…

ஒரு சிறுவன் தன் தாயிடம் சென்று “அம்மா யாரம்மா அந்த முதியவர், அந்த மலை மேல் உட்கார்ந்து கொண்டு தவம் …

Read More →

பொன்விதி தெரியுமா உங்களுக்கு?

உலகில் எல்லாவற்றிலும் எல்லாவர்க்கும் நன்மை பயக்க எல்லா மதங்களும் பின்வரும் ஒரு விஷயத்தை போதிக்கின்றன. இதனை நாம் “பொன் விதி” …

Read More →

மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள் புத்தகத்தை வாங்கி பயன்பெறுங்கள்!!

Scroll to Top